கிளிநொச்சி:
இலங்கையிலிருந்து விஷ போதைப்பொருட்களை முற்றாக ஒழிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டக் குழுவின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் சுனில் வட்டகல தலைமையில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளை முடக்குவதற்காக கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பொலிஸார், முப்படையினர், மாவட்ட செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கிராமிய மட்டத்திலான கண்காணிப்புக் குழுக்களை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் ஆபத்துகள் குறித்த விழிப்புணர்வை தீவிரப்படுத்துவதோடு, பாதிக்கப்பட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தகுந்த மறுவாழ்வு அளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், போதைப்பொருள் அற்ற ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டங்களில் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Comments 0
Be the first to comment.