ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
வரும் அக்டோபர் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த சர்வதேச விளையாட்டுப் விழாவின் ஆரம்ப விழா அணிவகுப்பில், இந்தியாவின் முன்னணி பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை சிம்ரன் சர்மா ஆகியோர் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய அணியை வழிநடத்தினர்.
ஆரம்ப விழாவிற்கு முன்னதாகவே பேட்மிண்டன் மற்றும் காற்பந்து போட்டிகள் ஆரம்பமாகிவிட்டன. இதில், பாரா பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் SL3-SU5 பிரிவில் களமிறங்கியுள்ள இந்தியாவின் மான்ஷி ஜோஷி - துளசிமதி முருகேசன் ஜோடி, தங்களது இரண்டாவது ஆட்டத்திலும் அபார வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதன் மூலம், இந்தத் தொடரில் இந்தியாவிற்கான முதலாவது பதக்கம் உத்தியோகபூர்வமாக உறுதியாகியுள்ளது.
நிகழ்ச்சிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்தியாவின் சார்பில் 11 விளையாட்டுப் பிரிவுகளில் 168 வீரர்கள் மாத்திரமே பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2023 ஹாங்சோ தொடரில் 303 வீரர்கள் பங்கேற்று, 29 தங்கம் அடங்கலாக மொத்தம் 111 பதக்கங்களுடன் 5-வது இடத்தை இந்தியா பெற்றிருந்ததே இதுவரை அதன் சிறந்த பிரகாசிப்பாகக் காணப்படுகிறது.
இந்த முறை வீரர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளமையால், முந்தைய பதக்க எண்ணிக்கையை மீண்டும் எய்துவதில் இந்தியாவிற்கு கடும் சவால் காத்திருக்கிறது.
அத்துடன், கடந்த முறை வெறும் ஒரு தங்கப் பதக்க வித்தியாசத்தில் 4-வது இடத்தை இந்தியாவிடமிருந்து தட்டிப்பறித்த தென் கொரியாவுடன் இந்த முறையும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் களம் இறங்கியிருந்த போதிலும், தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கப் பட்டியலில் முன்னிலை பெற இந்தியப் படை தீவிரமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments 0
Be the first to comment.