கண்டி:
கண்டி - மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருகோணமலையிலிருந்து சீமெந்து தூள் ஏற்றி வந்த வாகனம் (Bulker) ஒன்று, அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

தமது வாகனத்தின் பிரேக் செயலிழந்தமையே விபத்துக்குக் காரணம் என கைதான சாரதி தெரிவித்துள்ளார்.

விபத்தின்போது குறித்த சீமெந்து வாகனம் முதலில் ஒரு மோட்டார் சைக்கிளை மோதியுள்ளதுடன், அதனை சுமார் 160 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து 4 முச்சக்கரவண்டிகள், 2 டிப்பர்கள் உட்பட மொத்தமாக எட்டு வாகனங்களுடன் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதி மற்றும் அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களது பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்டு, உடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், விபத்தில் காயமடைந்த 6 பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐந்து பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் அவசர சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார். ஏனைய மூவரின் நிலைமை ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளது.



விபத்தின்போது கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சீமெந்து வாகன சாரதி மதுபோதையில் இருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சாரதி இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.