கொழும்பு:

தற்போது நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடுமையான மழை காரணமாக, நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருவதுடன், வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.


ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால், அதன் 30 வான் கதவுகளில் 8 வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

இதன் ஊடாக வினாடிக்கு 7,884 கன அடி நீர் கலாஓயாவுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கலாஓயாவின் இருமருங்கிலும் உள்ள தாழ்நில மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.

நேற்று பெய்த கடும் மழை காரணமாக இன்று அதிகாலை வரை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. எனினும், நீர்மட்டம் சற்றே குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 22) அதிகாலை ஒரு வான் கதவு தானாகவே மூடிக்கொண்டது.

தற்போது நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு மாத்திரம் தொடர்ந்து திறக்கப்பட்டுள்ளதாக அதற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தொடருமானால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகவே திறக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, நீர்த்தேக்க அணைக்குக் கீழ் பகுதியில், கொத்மலை ஓயாவின் இருமருங்கிலும் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு பொறியியலாளர்கள் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.