சமூக வலைத்தளப் பதிவொன்றுக்காக சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் சவூதி உச்ச நீதிமன்றத்தால் அத்தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் இல்லத்தில் தற்போது நிம்மதியும், அதேநேரம் எஞ்சிய சட்ட நடைமுறைகள் குறித்த எதிர்பார்ப்பும் கலந்த சூழல் நிலவுகிறது.
இது குறித்து அனோஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஊடகங்களுக்குத் தங்களது தற்போதைய நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த உத்தியோகபூர்வ தகவலை இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தங்களுக்குத் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியதாக அனோஜனின் சகோதரர் தெரிவித்தார்.
மரண அச்சுறுத்தலில் இருந்த தங்களது மகனின் உயிர் காக்கப்பட்ட செய்தி, கடந்த சில மாதங்களாகக் கண்ணீரிலும் கடுமையான மன உளைச்சலிலும் தவித்து வந்த ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும், நற்பிட்டிமுனை கிராம மக்களுக்கும் ஒரு தற்காலிக ஆறுதலைத் தந்துள்ளதாக அனோஜனின் பெற்றோர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், அனோஜனுக்கு விதிக்கப்பட்ட முந்தைய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் தொடர்பான சட்ட விவகாரங்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராதது குறித்துக் குடும்பத்தினர் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து அனோஜனின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில்:
"மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது எமக்கு மிகப்பெரிய நிம்மதி. ஆனால், அண்ணன் எப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டு எங்களிடம் வருவார் என்பதே எங்களின் இப்போதைய ஒரே எதிர்பார்ப்பு. சிறைத்தண்டனை மற்றும் அபராதம் போன்ற எஞ்சிய சட்ட சிக்கல்களும் முழுமையாக நீக்கப்பட்டு, அவர் பாதுகாப்பாக இலங்கை மண்ணில் கால் பதிக்கும் அந்த நாளில் தான் எங்கள் குடும்பத்திற்குப் பூரண நிம்மதி கிடைக்கும்." எனத் தெரிவித்தார்.
தங்களது மகனைக் காப்பாற்ற தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சவூதிக்குச் சட்ட வல்லுநர்கள் குழுவை அனுப்பி நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வெளிநாட்டு விவகார அமைச்சு, இராஜதந்திரிகள் மற்றும் இதற்காகக் குரல் கொடுத்த மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அனோஜனின் தாயார் மற்றும் தந்தை கண்ணீர் மல்கத் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
எதிர்வரும் நீதிமன்ற நகர்வுகளின் போது இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளித்து, அனோஜனை முழுமையான விடுதலையுடன் தாயகத்திற்கு அழைத்து வர விரைவான இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே இக்குடும்பத்தின் தற்போதைய ஒற்றை எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments 0
Be the first to comment.