சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் தண்டனை இரத்துச் செய்யப்பட்டுள்ள தீர்மானத்தை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
இந்தச் செய்தி, சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கும், அவரது விடுதலைக்காக அயராது பாடுபட்ட அனைவருக்கும் பெரும் ஆறுதலையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது.
 
 உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கூட்டுமுயற்சிகளையும் ஒற்றுமையையும் இந்த நம்பிக்கையளிக்கும் முன்னேற்றம் பிரதிபலிக்கின்றது. மனிதநேயத்துடன் பங்களித்த அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்.
 
இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை.
 
தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட வேண்டும்.
 
அவர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நாளிலேயே எமது கூட்டு முயற்சி முழுமை பெறும்.
சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் அமைவாக, சிவராசா அனோஜனை இயன்றளவு விரைவாகவும் பாதுகாப்பாகவும் நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன்.
 
இன்று இந்தச் சாதகமான முன்னேற்றத்தை நன்றியுணர்வுடன் வரவேற்கின்ற போதிலும், அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்குத் திரும்பி, தனது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணையும் நாளே நாம் உண்மையாகக் கொண்டாட வேண்டிய நாளாகும் என எம்பி சாணக்கியன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.