ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா 2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 10 தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியமானதொரு பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
"தொப்புள்கொடி பயணம்" எனப் பெயரிடப்பட்ட இப்பயணத்தின் போது, 20 நாட்கள் தமிழகத்தில் தங்கியிருந்த இக்குழுவினர், 48 இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சந்தித்து ஈழத் தமிழர்களின் நீதிக்கான குரலை வலுவாகப் பதிவு செய்துள்ளனர்.
இப்பயணத்தின் போது, தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
மேலும், புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி, புதுச்சேரி அமைச்சர் பெ.ராஜவேலு, பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோரையும், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் மலேசிய உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி உள்ளிட்ட சர்வதேச தமிழ் ஆளுமைகளையும் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இவர்களுடன் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களும் இந்தச் சந்திப்புகளில் பங்கெடுத்தனர்.
பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் நேரில் சென்று இக்குழுவினர் உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தமிழகப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இலங்கை திரும்பிய இப்பெண்கள் குழுவினர், கடந்த வாரம் திருகோணமலையில் விசேட மாநாடு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இம்மாநாட்டில் மதகுருமார்கள், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராஜா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன், இ. சிறீநாத், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ர.விஜயதர்சினி உட்பட பல முக்கிய அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களே நேரடியாகத் தமிழகக் களத்தில் இறங்கி, ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூகத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து நடத்தியுள்ள இந்தத் தொப்புள்கொடி பயணம், ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தை சர்வதேச அளவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
Comments 0
Be the first to comment.