கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் படகுகளும், 20 மீனவர்களுக்கு புதிய அடையாள அட்டைகளும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதையும், இயற்கை பேரழிவுகளினால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 'டித்வா' பேரிடர் நிலையினால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிவாரணத் திட்டத்தின் கீழ், தட்டவன்கோட்டிப் பகுதி மீனவர்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 19 மீனவர்களுக்கு இவ்வாறு படகுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கிடையில், மீனவர் அடையாள அட்டைகளை வழங்கும் நடைமுறையை மேலும் பரவலாக்கி, திறம்படச் செய்யும் நோக்கில் புதிய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டது.
இதுவரை கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்த மீனவர் அடையாள அட்டைகள், இனிவரும் காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே அச்சிடப்பட்டு வழங்கப்படுவதற்கான வசதி இதன் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் புதிய நடைமுறையின் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 மீனவர்களுக்குப் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்புக்கு வருவதற்குச் செலவாகும் நேரமும் பணமும் மிச்சப்படுத்தப்பட்டு, மாவட்ட மட்டத்திலேயே உரிய சேவையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள மீனவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.
மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல், மீன்பிடித் தொழிலை மேலும் ஊக்குவித்தல் மற்றும் அரச சேவைகளை மக்களுக்கு மிகவும் இலகுவாகவும் திறம்படவும் வழங்குதல் என்பன இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
பொருட்களை வழங்கி வைத்த பின் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், "வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், கடற்றொழில் நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தி ஊக்குவிப்பதும் தற்போதைய அரசின் முதன்மை நோக்கமாகும். அரச சேவைகள் கொழும்பில் முடங்கிக் கிடக்காமல், மக்களிடம் மிக நெருக்கமாகவும் திறம்படவும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த டிஜிட்டல் பரவலாக்கல் திட்டம் கிளிநொச்சியில் தொடங்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.
Comments 0
Be the first to comment.