வவுனியா: வவுனியா வடக்கு, புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதியாமடு பகுதியில் பிக்கப் (Pick-up) ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று பிற்பகல் வேளையில் மதியாமடு வீதியூடாக வேகமாக பயணித்த பிக்கப் ரக வாகனம் ஒன்றே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரத்திலிருந்த வேலி மற்றும் மின்சாரத் தூண் (மின்கம்பம்) என்பவற்றுடன் பலமாக மோதியுள்ளது.
இந்த மோதலின் வீரியம் காரணமாக மின்சாரத் தூண் உடைந்து சேதமடைந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான வாகனத்தின் முன்பகுதியும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் கூடி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
 
இப்பகுதியில் அண்மைக்காலமாக வாகன விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டும் பொலிஸாரும் சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அதிவேகத்தை தவிர்த்து, வீதி ஒழுங்குமுறைகளைப் பேணி அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.