வவுனியா:
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட 1,818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
 
இவர்களில் 21 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட 749 இளைஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடையதாக வவுனியா மாவட்டத்தில் மாத்திரம் 469 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலைமை சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிள்ளைகளின் செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப் போக்குவரத்து மற்றும் சொகுசுப் பேருந்துகள் (Luxury Buses) மூலமாக மாவட்டங்களுக்கு இடையில் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக முப்படைப் புலனாய்வுப் பிரிவினரை (Tri-Forces Intelligence) களத்தில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
 
வவுனியா மாவட்டத்தில் போதைப்பொருள் வலையமைப்பை முற்றாக ஒழிப்பதற்காக, வரும் நாட்களில் இந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் பலமடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.