யாழ்ப்பாணம் (13.10.2026):
யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் இன்று (13) நண்பகல் வேளையில் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் சிக்கி இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - தென்மராட்சி ஏ-9 பிரதான வீதி கைதடிப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் ரக கனரக வாகனமும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த நிசாந்தன் நிதர்சன் (வயது 23) மற்றும் கமலேந்திரன் கஜந்தன் (வயது 20) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவாறு கையடக்கத் தொலைபேசியில் காணொளி (வீடியோ) பதிவு செய்துகொண்டு அதிவேகமாகச் சென்றதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து தகவல் அறிந்த சாவகச்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.