கொழும்பு:
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (16) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, கோட்டை நீதவான் பாசன் அமரசேனவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வணக்கத்திற்குரிய உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 நபர்களுக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, மகா சங்கத்தினரால் நேற்றைய தினம் (15) மாலை முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வந்தது.
அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இவ்வாறு போராட்டங்களை முன்னெடுப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
 
 
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் கட்டளையை போராட்டக்காரர்களுக்கு வாசித்துக் காண்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, காலி வீதிக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றியுள்ளதுடன், அங்கிருந்து கலைந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.