யாழ்ப்பாணம்:
யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வலி. வடக்கு பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து தெல்லிப்பளையில் பாரிய எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.
அக்டோபர் 8 காலை தெல்லிப்பளை சந்தியில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள் அங்கிருந்து தெல்லிப்பளை பிரதேச செயலகம் நோக்கி கண்டனப் பேரணியாகச் சென்றனர்.
இதுவரை காலமும் மதுபானசாலைகள் இல்லாத அமைதியான பிரதேசமாகத் திகழும் வலி. வடக்கில், புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்குவது சமூகச் சீரழிவுக்கு வழிவகுக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
மக்களின் விருப்பத்திற்கு மாறாக புதிய மதுபானசாலைக்கு அனுமதியளிக்க முற்படுவதாகக் குற்றம்சாட்டி, வலி. வடக்கு பிரதேச செயலரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் வீதியில் போராடினர்.
புதிய மதுபானசாலைக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்யுமாறு வலியுறுத்தி உரிய அதிகாரிகளிடம் தமது ஆட்சேபனை மகஜரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர்.




Comments 0
Be the first to comment.