கிளிநொச்சி:

 கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த 17 வயது யுவதியான சமராகியின் (Samarazhagi) மரணத்திற்கு நீதி கோரி, அப்பகுதி பொது அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

தேசிய அளவிலான கபடி போட்டிகளுக்குத் தேர்வாகியிருந்த திறமையான மாணவியான சமராகியின் மரணம், ஆரம்பத்தில் தற்கொலையாகக் கருதப்பட்டாலும், அதன் பின்னணியில் பெரும் அச்சுறுத்தலும் பாலியல் ரீதியான கட்டாயப்படுத்தல்களும் இருந்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், மாணவியின் ரகசியக் காணொளி (வீடியோ) ஒன்றை வைத்துக் கொண்டு, அவரைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே இந்தத் துயர முடிவுக்குக் காரணம் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் திசைமாறிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தி, உருத்திரபுரம் பகுதியின் 6 முன்னணி சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து கிளிநொச்சி பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு (DIG) அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில் , 
 
 
 மாணவியின் மரணம் குறித்து முறையான மற்றும் எவ்வித முறைகேடுகளும் அற்ற புதிய விசாரணையை (Fresh Inquiry) பொலிஸார் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
 
 உயிரிழந்த யுவதியின் மொபைல் போன் மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளை முழுமையான தடயவியல் ஆய்வுக்கு (Forensic Examination) உட்படுத்த வேண்டும்.

யுவதியை மிரட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரகசியக் காணொளியை உருவாக்கியவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

 

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குப் பூரண நீதி கிடைக்கும் வரையிலும், குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படும் சக்திகளுக்கு எதிராகவும் தங்களின் நீதிக்கான குரல் ஓயாது எனப் போராட்டக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.