யாழ்ப்பாணம்:
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ வெளியிட்டுள்ள இடைக்கால அறிக்கை, இலங்கை அரசையும் இராணுவத்தையும் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்றும் நோக்கில் அமைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சனி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தத்தினால் உயிரிழந்திருக்கலாம் எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது 170 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இது பேரினவாதத்தின் கைக்கூலியாகச் செயற்பட்டு, இலங்கை அரசையும் இராணுவத்தையும் திருப்திப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட திட்டமிட்ட அறிக்கையாகும்.
பொதுவாக இந்து முறைப்படி உடல்கள் தகனம் செய்யப்படும் செம்மணி சிந்துபாத்தி மயானப் பகுதியில், ஆடைகள் இன்றி 2 முதல் 3 அடி ஆழக் குழிகளில் மனித உடல்கள் குவியல் குவியலாக புதைக்கப்பட்டுள்ளன.
மேலும், அரச சார்பற்ற நிறுவனம் வழங்கிய புத்தகப் பையுடன் சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, எலும்புகள் முறிக்கப்பட்டு, பிணைக்கப்பட்டிருந்த ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.
இத்தகைய கொடூரமான சான்றுகள் இருக்கும்போது, இதனை இயற்கை மரணம் என்று கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இது குறித்துப் பேராசிரியர் மௌனம் காப்பது ஏன்? யுத்த காலத்தில் செம்மணிப் பகுதி முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு சூனியப் பகுதியாகும் (High Security Zone).
ஆனால், இந்த உண்மையை ராஜ் சோமதேவ தனது அறிக்கையில் திட்டமிட்டே தவிர்த்து இராணுவத்தைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.
மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியான அடக்குமுறைகளையே மேற்கொண்டு வந்துள்ளன.
1996 ஆம் ஆண்டின் கொடூரமான அடையாளமாக விளங்கும் செம்மணிப் பகுதியில், தற்போது வரை சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு உள்நாட்டு விசாரணைக் குழுவும் தமிழ் மக்களுக்கு உண்மையையோ அல்லது நீதியையோ பெற்றுத் தராது என்பதை இந்த அறிக்கை மீண்டும் நிரூபித்துள்ளது.
இதனால் தான் தாங்கள் ஆரம்பம் முதலே சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வருவதாகக் கனகரஞ்சனி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை (UN) நேரடியாகத் தலையிட்டு நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சர்வதேச நாடுகளும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களும் இலங்கை அரசுக்கு உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும் என அவர் அவசரமாக வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி புதைகுழி அறிக்கை: பேரினவாதத்தின் கைக்கூலியாகச் செயல்பட்டு இராணுவத்தைக் காப்பாற்றுகிறார் பேராசிரியர் ராஜ் சோமதேவ – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் சாடல்
Comments 0
Be the first to comment.