நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக முழுமையாகச் செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் (Generators) வெற்றிகரமாக மீண்டும் தேசிய மின் விநியோகக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன.


கடந்த 17 ஆம் திகதியன்று நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து, இந்த மின் நிலையத்தின் மூன்று பிறப்பாக்கிகளும் முற்றாகச் செயலிழந்தன.


பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக மின் நிலையத்தை உடனடியாக மின் கட்டமைப்பில் இணைக்கப் போவதில்லை என்றும், சில நாட்களுக்குப் பின்னரே இணைக்கப்படும் என்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது.


அவசர நிலைமைகளின் போது பின்பற்றப்படும் வழமையான பாதுகாப்பு வழிமுறைகளைக் கருத்திற்கொண்டே இந்தத் தாமதத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.


தற்போது அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளும் சரிபார்க்கப்பட்டு, மூன்று மின் பிறப்பாக்கிகளும் வெற்றிகரமாக மீண்டும் இயக்கப்பட்டு, மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.