நாட்டின் உண்மையான முதலீடு என்பது கட்டிடங்களில் இல்லை; மாறாக அது பிள்ளைகளின் கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சூழலை நேசிக்கும் முழுமையான ஆளுமைமிக்க சந்ததியினரை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவின் மிகப்பெரிய இளஞ்சிவப்பு படிகப் பாறை (Rose Quartz Rock) அமைப்பும், மிகப்பெரிய நாகமரக் காடும் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'தேசிய நாமல் உயன' பூங்காவின் 36 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களின் அரசாங்கம் பல நடைமுறை முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் புதிய சட்ட விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன:
- அபாயகரமான கழிவுகள்:
அபாயகரமான கழிவுகளைச் சூழலில் கொட்டி இயற்கையை அழிப்பவர்களுக்கு எதிராக 20 மில்லியன் ரூபாய் (ரூ. 2 கோடி) வரை தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- ஈரநிலங்கள் பாதுகாப்பு: பாதுகாக்கப்பட்ட ஈரநிலங்களை அழிப்பவர்களுக்கு எதிராக 1 மில்லியன் முதல் 10 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
- தாக்க மதிப்பீடு: இனிவரும் காலங்களில் புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மேலும் கடுமையாக்கப்படும்.
உலகில் எந்தவொரு நாட்டின் உண்மையான பலமும் அதன் மனித வளத்திலேயே உள்ளது என சுட்டிக்காட்டிய பிரதமர், வெறும் பரீட்சைகளை மட்டுமே மையமாகக் கொள்ளாமல், இயற்கையோடு இணைந்த ஆளுமைமிக்க பிள்ளைகளை உருவாக்கவே புதிய கல்வி மறுசீரமைப்புகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகக் கூறினார்.
தனித்துவமான பல்லுயிர்ப் பெருக்கத்தையும், பெரும் கல்வி மதிப்பையும் கொண்ட தேசிய நாமல் உயனவை எதிர்காலச் சந்ததிக்காகப் பாதுகாப்பதற்குத் தமது முழு வாழ்வையும் அர்ப்பணித்த வனவாசி ராஹுல தேரருக்கும், அவரது உன்னதமான முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் விசேட வேலைத்திட்டம் காரணமாக, இன்று நாமல் உயனவை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவசமாகத் தூய்மையான குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைவுகூர்ந்த பிரதமர், எதிர்காலச் சந்ததிக்காகச் சூழலையும் பிள்ளைகளின் கல்வியையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
Comments 0
Be the first to comment.