மன்னார் படுகையில் எண்ணெய், எரிவாயு ஆய்வு: சர்வதேச முதலீடுகளை ஈர்க்க இலங்கை திட்டம்

சுமார் 33,964 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மன்னார் படுகையின் ஆழ்கடல் ஆய்வுப் பகுதியில் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதே இலங்கை அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தற்போது இலங்கை அரசு தனது சொந்த நிதியில் புதிய ஆழ்கடல் துளையிடல் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, 1967 முதல் 2019 வரை பல்வேறு காலகட்டங்களில் சேகரிக்கப்பட்ட இருபரிமாண மற்றும் முப்பரிமாண நிலநடுக்கவியல் தரவுகளுடன், 2011ஆம் ஆண்டு கெய்ர்ன் நிறுவனம் சேகரித்த கிணற்றுத் தரவுகளையும் நவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருட்கள் மூலம் மறுஆய்வு செய்து, ஹைட்ரோகார்பன் வளங்கள் இருக்கக்கூடிய நான்கு பிரதான ஆய்வுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு வளம் இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரையிலான ஆழத்தில் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வுகளை முன்னெடுக்க, சர்வதேச எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பல நூறு மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை ஈர்க்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக லண்டன் மற்றும் கோலாலம்பூரில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.