கண்டி - யாழ்ப்பாணம் (A9) வீதியில், அக்குரணை பகுதியில் சீமெந்து கலவை லொறி (Ready-mix concrete truck) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்களுடன் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
 
இந்த பயங்கர விபத்தில் மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து கலவை லொறி, அக்குரணை குருவொட சந்தி (7ஆம் கட்டை) பகுதியில் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியில் பயணித்த மற்றும் வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த த்ரீவீலர்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் உட்பட சுமார் 10 வாகனங்களை அடுத்தடுத்து மோதித் தள்ளிய பின் தலைகீழாகக் கவிழ்ந்தது.

லொறி மோதிய வேகத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் அக்குரணை பிரதேச வைத்தியசாலையிலும், கண்டி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

விபத்துக்குள்ளான லொறியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் பிரேக் செயலிழந்ததே விபத்துக்குக் காரணமா அல்லது சாரதியின் தூக்கக் கலக்கமா என்ற கோணத்தில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.