இலங்கையில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் 23,000 பட்டதாரிகளை புதிய ஆசிரியர்களாக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கைஎடுத்துள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார் . நாட்டின் வரலாற்றிலேயே மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இதுவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹபரண மகா வித்தியாலயத்தில் சுமார் 100 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ள மூன்று மாடிகளைக் கொண்ட புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் நவீன மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த விசேட கல்விப் பிரகடனங்களை வெளியிட்டார்

அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் நிதியொதுக்கீடு
தேசிய பாடசாலைகளிலோ அல்லது மாகாணப் பாடசாலைகளிலோ பயிலும் மாணவர்கள் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி, ஒரே மாதிரியான பொதுப் பரீட்சைகளுக்கே முகங்கொடுக்கின்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சமமான கவனமும், சமமான கல்வி வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகப் பிரதமர் தெரிவித்தார்.
 
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம், அதிகரித்த முதலீடுகள், சிறந்த கொள்கை உருவாக்கம் மற்றும் மனித, பௌதீக வளங்களை வலுப்படுத்துவதன் மூலம் இத்துறையில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
நீண்டகாலமாக நிலவி வந்த சட்டச் சிக்கல்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த 23,000 ஆசிரியர் நியமனங்களுக்கான அனுமதி கிடைத்துள்ளது.
புதிய பாடங்கள் மற்றும் கல்வியின் உண்மையான நோக்கம்
 
நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களை மாணவர்கள் நன்கு புரிந்துகொண்டு, அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும் வகையில், தொழில்முனைவு (Entrepreneurship) மற்றும் நிதிசார் அறிவு (Financial Literacy) உள்ளிட்ட புதிய பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப் பிரதமர் அறிவித்தார்.
கல்வியின் உண்மையான நோக்கம் குறித்து அவர் மேலும் விளக்குகையில், "மாணவர்களைப் பரீட்சைகளில் சிறந்து விளங்கத் தயார்படுத்துவதைத் தாண்டி கல்வி அமைய வேண்டும். மற்றவர்களுக்கு உதவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் நாட்டின் ஜனநாயகச் செயல்முறையில் தீவிரமாகப் பங்கேற்கும் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதிலேயே கல்வி கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
 
அரசாங்கத்தின் இந்த பாரிய ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள், 2027 ஆம் ஆண்டு புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நாட்டின் கல்வித்துறையில் மிக முக்கியப் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.