வவுனியா:
கீழ் அருவியாற்று (கீழ் மல்வத்து ஓயா) நீர்த்தேக்கத் திட்டத்தினால் வாழ்வாதார நிலங்களை இழக்கும் மக்களுக்கு, அவர்கள் இழந்த நிலத்தின் அளவிற்கு நிகரான மாற்றுக்காணிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கீழ் அருவியாற்று (கீழ் மல்வத்து ஓயா) நீர்த்தேக்கத் திட்டத்தினால் வாழ்வாதார நிலங்களை இழக்கும் மக்களுக்கு, அவர்கள் இழந்த நிலத்தின் அளவிற்கு நிகரான மாற்றுக்காணிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளை ஊடறுக்கும் கீழ் அருவியாற்றை தந்திரிமலை பகுதியில் மறித்து, இந்த நீர்த்தேக்கத் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான சாதக பாதகங்கள் மற்றும் மக்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்த விசேட விளக்கமளிப்பு கலந்துரையாடல் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது திட்ட முகாமையாளரால் முழுமையான விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. திட்டத்தின் மூலம் செட்டிகுளம் பிரதேசத்தின் ஆனைவிழுந்தான் மற்றும் சின்னச்சிப்பிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தங்கள் வயற்காணிகளையும் மேட்டுக்காணிகளையும் இழக்க நேரிட்டுள்ளது.
பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான இழப்பீட்டு விபரங்களை வெளியிட்ட அதிகாரிகள், "மக்கள் எவ்வளவு காணியை இழந்திருந்தாலும், பிரதான குடும்பமாக இருந்தால் 1 ஏக்கர் காணியும், உபகுடும்பமாக இருந்தால் 1/2 ஏக்கர் காணியும் மட்டுமே மாற்றுக்காணியாக வழங்கப்படும். எஞ்சிய காணிகளுக்கு பண வடிவில் நஷ்டஈடு வழங்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் இந்த அறிவிப்புக்கு மறுப்புத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம், மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த கையகப்படுத்தப்படும் அதே விஸ்தீரணத்தைக் கொண்ட காணிகளையே மாற்றுக்காணியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், செட்டிகுளம் பகுதியில் போதிய அளவு மாற்றுக்காணிகள் இல்லாத பட்சத்தில், அங்கு கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் குளங்களை உடனடியாக புனரமைத்து, அக்குளங்களின் கீழ் அமையப்பெற்றுள்ள நிலங்களை மக்களுக்கு மாற்றுக்காணிகளாக வழங்க முடியும் என்ற மாற்று யோசனையையும் அவர் முன்வைத்தார்.
அத்துடன், மாற்றுக்காணி விநியோகத்தின் போது அதிகாரிகள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கலந்துரையாடலில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன் மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர, செட்டிக்குளம் பிரதேச செயலாளர், வனவள திணைக்கள அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
Comments 0
Be the first to comment.