ஹபராதுவ (அக்டோபர் 26): இலங்கையின் ஹபராதுவ - கொக்கலை பகுதியில் உள்ள இரயில்வே குறுக்குப்பாதையில், கல்விச் சுற்றுலா முடிந்து திரும்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்த 14 மற்றும் 15 வயதுடைய 10 சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக கராபிட்டிய மற்றும் உனவடுன மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேரிட்ட சமயத்தில், பேருந்தில் சுமார் 41 சிறுவர்கள், 14 மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் ஆறு பெற்றோர்கள் உட்பட மொத்தம் 61 பேர் பயணம் செய்துள்ளனர். கொட்டாவை பகுதியிலிருந்து கொக்கலையில் உள்ள மார்ட்டின் விக்ரமசிங்க நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுவிட்டு, அவர்கள் மீண்டும் கொட்டாவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.


இவ்விபத்து தொடர்பாக 40 வயதுடைய பேருந்து ஓட்டுநரும், 21 வயதுடைய நடத்துநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரயில்வே குறுக்குப்பாதையை கவனக்குறைவாகக் கடக்க முயன்றதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், ஹபராதுவ காவல்துறை இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.