சட்டத்திற்குப் புறம்பாக நடக்கும் அல்லது சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் பொலிஸ் திணைக்களம் ஒருபோதும் பாதுகாப்பு வழங்காது என்றும், அவர்களுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் ஒழுக்காற்று ரீதியாகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
தேசிய செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த நாட்களில் பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர்கள் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாலேயே இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நிகழ்கின்றன என்றும், இனிவரும் காலங்களில் இவற்றைத் தடுக்கப் பொலிஸ் மா அதிபர் தொடர்ச்சியாக வழிகாட்டல்களை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஹோமாகம சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 125 ஆம் பிரிவின் கீழ் விசேட விசாரணைக் குழுவொன்றிடம் (மேல் மாகாண தெற்குப் பிரிவு) விசாரணை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக ஹோமாகம தலைமையகப் பொலிஸ் பரிசோதகர், குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, சோதனைகளுக்கு உதவியளித்த போதைப்பொருள் பிரிவின் அதிகாரி (Vice OIC) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆகிய நால்வரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இந்த மரணம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான அனைத்து சாட்சியங்களும் சேகரிக்கப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.
கொபெய்கனே பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒருவரைப் பொலிஸார் சென்று கைது செய்ததாகவும், பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், கைது செய்யப்படுவதற்கு முன்னர் பொதுமக்கள் சிலர் அச்சந்தேகநபரைத் தாக்கியதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பொதுமக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை பொலிஸ் காவலில் இருந்த மூன்று சந்தேகநபர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்கள் குறித்துப் பிரிவுப் பொறுப்பதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்ததும் மேலதிக விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
தவறிழைக்கும் பொலிஸாருக்குப் பாதுகாப்பு இல்லை; ஹோமாகம சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் பணி இடைநீக்கம்: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Comments 0
Be the first to comment.