மாத்தறை, தலல்ல, நாவோட்டுன்ன கடல் மற்றும் கடற்கரைப் பகுதியில் இன்று (24) காலை இலங்கை கடற்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 475 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குக் கிடைத்த நம்பகரமான ரகசிய தகவலுக்கமையவே இந்த விசேட கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாவோட்டுன்ன கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் 10 சாக்குப்பைகளும், 11 பயணப் பைகளும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கு படகும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் நிபுணத்துவ உதவியுடன் இந்த போதைப்பொருள் தொகை குறித்து மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தப் பரிசோதனையில், கைப்பற்றப்பட்ட அத்தொகுதியில் 200 கிலோ கிராமுக்கும் அதிகமான ஐஸ் (Ice) போதைப்பொருளும், 275 கிலோ கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் (Heroin) போதைப்பொருளும் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான போதைப்பொருள் மற்றும் டிங்கு படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Comments 0
Be the first to comment.