அநுராதபுரம், துருவில வீதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 10 வயது சிறுமி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தஹய்யாகம சுற்றுவட்ட வீதியில் இருந்து 55 வீடுகள் பகுதியை நோக்கிச் சென்ற பேருந்து, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் பின்னாலிருந்து மோதியதில் நேற்று (24) இரவு இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த சிறுமி அநுராதபுரம், விஜயபுர பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற சிறுமியின் தாயார் பலத்த காயமடைந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.