இலங்கையை அண்மித்த பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு மேற்கு நோக்கிய திசையில் விலகிச் சென்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (அக்டோபர் 23, 2026) அறிவித்துள்ளது.
இருப்பினும், இதன் தாக்கம் இன்றைய தினமும் நாட்டில் நீடிக்கக்கூடும் என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும், அநுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாட்டின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் மற்றுமொரு புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Comments 0
Be the first to comment.