கற்பிட்டி:
இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி வரப்பட்ட 570 கிலோகிராமிற்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
 
வடமேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தின் ஸ்ரீலங்கா கடற்படைக் கப்பல் 'விஜய' பிரிவினர் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் இணைந்து கற்பிட்டி கடற்கரைப் பகுதியில் விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, கடற்கரையில் சந்தேகத்திற்குரிய முறையில் காணப்பட்ட 15 பொதிகளைப் பரிசோதித்த போதே, அவற்றுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பெரும் அளவிலான பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
 
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் அனைத்தும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்பரப்பு மற்றும் கடற்கரை வழியான கடத்தல் தொழில்களை முறியடிக்கும் நோக்கில் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.