இலங்கையில் கோதுமை மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னணி கோதுமை மா விநியோக நிறுவனங்களான பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகிய நிறுவனங்கள் இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளன.

உலக சந்தையில் கோதுமைக்கான தட்டுப்பாடு, கப்பல் கட்டண உயர்வு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற காரணிகளே இந்த திடீர் விலை உயர்வுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளமை நுகர்வோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக பாண்  உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும், உணவகங்களில் விற்கப்படும் பரோட்டா, ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் கணிசமான அளவு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதனால் பொதுமக்கள் அன்றாட உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மேலதிகப் பொருளாதாரச் சுமையை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.