சமூக வலைத்தளப் பதிவு ஒன்றின் மூலம் மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 24 வயதான இலங்கைத் தமிழ் இளைஞர் அனோஜன் சிவராசாவின் (Anojan Sivarasa) விவகாரத்தில், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) தாக்கல் செய்யப்படவுள்ள இறுதி மேன்முறையீட்டு மனு முழுமையாகத் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையைச் சேர்ந்த உயர் மட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு நேரில் விஜயம் செய்து, அங்குள்ள உள்ளூர் சட்டக் குழுவினருடன் இணைந்து இந்த மேன்முறையீட்டு மனுவை இறுதி செய்துள்ளது.
இந்த ஆலோசனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் இந்த மனு அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


சமூக வலைத்தளங்களில் மத நிந்தனை கருத்துக்களைப் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அனோஜன் சிவராசாவுக்குச் சவூதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.


இருப்பினும், முன்னதாக அந்த நாட்டின் கீழ்நிலை நீதிமன்றம்  ஒன்று இவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதித்திருந்தது.


எனினும், சவூதி சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றி இவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.