யாழ்ப்பாணம்:
செம்மணிப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையில் 'பெரும் மனிதப் புதைகுழி' என்ற சொற்றொடரைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ திட்டமிட்டு நீக்கியுள்ளார் எனச் சந்தேகிப்பதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் (Motion) ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த 190 பக்க அறிக்கை, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் மனித உரிமை அமைப்புகளிடையே தற்பொழுது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தொடர்ச்சியாக முன்னிலையாகி வரும் சட்டத்தரணிகள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நகர்த்தல் பத்திரத்தில் பல முக்கியமான கேள்விகளும், அறிவியல் ரீதியான சந்தேகங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளில் 'பெரும் புதைகுழி' (Mass Grave) என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய இடைக்கால அறிக்கையில் அந்தச் சொல் விடுபட்டுள்ளமையானது தீவிரமான சந்தேகங்களை எழுப்புவதாகவும், இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகக் கருத வேண்டியுள்ளதாகவும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த அகழ்வுப் பகுதியை ஒரு வழக்கமான பொது மயானம் அல்லது அடக்க இடமாகக் கருதுவதற்கான அடிப்படை ஏதேனும் பேராசிரியருக்கு இருந்தால், அது தொடர்பான மயானப் பதிவுகள், நிலப் பயன்பாட்டின் வரலாறு, சட்ட ஏற்பாடுகள் மற்றும் நம்பகமான சான்றுகள் மூலம் அறிக்கை தெளிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட ஆழம், பரவல், மண் அடுக்குகளில் அவற்றின் அமைவிடம் மற்றும் அவற்றின் நிலை ஆகியவை தடயவியல் ஆய்வுகளில் மிக முக்கியமான அம்சங்களாகும். இந்த அம்சங்கள் வழக்கமான அடக்கம் என்ற விளக்கத்துடன் எவ்வாறு பொருந்துகின்றன என்பதை அறிவியல் அவதானிப்புகள் மற்றும் ஒப்பீட்டுச் சான்றுகளுடன் அறிக்கை விளக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருக்கலாம் எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் கடுமையாக மறுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இத்தகைய பேரழிவுகள் ஏற்பட்டதற்கான போதிய சான்றுகள் இல்லை என்று அவர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
அடையாளம் காணக்கூடியதும் சரிபார்க்கக் கூடியதுமான அறிவியல் சான்றுகள் ஆதரிக்காத வரை, போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் செம்மணிப் புதைகுழிக்கான காரணமாகத் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைக் கருத முடியாது எனவும், இதற்கான உண்மைநிலை மற்றும் அறிவியல் அடிப்படைகளைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சமர்ப்பித்துள்ள நகர்த்தல் பத்திரத்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Comments 0
Be the first to comment.