பொகவந்தலாவ:

தோட்டத் தொழிலாளர்களின் காணி, வீடமைப்பு உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நுண்கடன் நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, பொகவந்தலாவ நகரில் இன்று (18) மகளிர் குழுவொன்றினால் பிரம்மாண்ட பேரணி மற்றும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொருளாதாரத்திற்கான மகளிர் அமைப்பினால்
 
 
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டத்தில், பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெருமளவிலான பெண்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இன்றைய பேரணியின் போது போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முறையான வீடமைப்புத் திட்டங்களை அமைத்து தருவதோடு, அவர்களுக்கான காணி (நில) உரிமைகளையும் சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
கிராமப்புற மற்றும் தோட்டப்புறப் பெண்களை பெரும் பொருளாதாரச் சுமைக்குள் தள்ளியுள்ள நுண்கடன் (Microfinance) பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு காண வேண்டும்.
குடும்பங்களிலும் சமூகத்திலும் பெண்கள் வழங்கும், மதிப்பிடப்படாத ஊதியமற்ற பராமரிப்புப் பணிகளுக்கு உரிய அங்கீகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும்.
 
மனித ஆரோக்கியத்திற்கும் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தீவிர நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
 
பொகவந்தலாவ நகரின் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாகச் சென்ற மகளிர் குழுவினர், நகரின் மத்தியில் கூடி தங்களது கவனயீர்ப்பு கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு வலியுறுத்தும் வகையில் அமைதியான முறையில் போராட்டத்தை நிறைவு செய்தனர்.