பாரிஸ் / ரோம்:
ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினம் (Cost of Living) மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு எதிராக வெடித்துள்ள மக்கள் போராட்டம், பிரான்ஸைத் தொடர்ந்து தற்போது இத்தாலி மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கும் பரவி தீவிரமடைந்துள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கி, தற்போது ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைக்கும் எதிரான போராட்டமாக மாறியுள்ள இந்த வன்முறையில், லிமோஜஸ் நகரின் 143 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நகர சபை கட்டிடம் (Town Hall) தீக்கிரையாக்கப்பட்டது.
உலகப் போர்களைத் தாங்கி நின்ற இக்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.
 
பாரிஸின் மேற்குப் பகுதியில் உள்ள ஊடக நிறுவனங்களின் கட்டிடங்கள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
 
 
நாடு முழுவதும் 1,200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
 
வன்முறை குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், "பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் மற்றும் சூறையாடலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.
 
பிரான்சின் நிலையைத் தொடர்ந்து, இத்தாலியிலும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். மிலன், துரின், போலோக்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளன.
 
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, "போராடுவது மக்களின் உரிமை, அதற்கு நான் மதிப்பளிக்கிறேன். இதில் இடதுசாரி அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.ஆனால், மிலன் மற்றும் துரின் நகரங்களில் நடக்கும் வன்முறைகளை ஏற்க முடியாது. போராட்டத்தைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் குழப்பத்தை விளைவிக்க முயல்கின்றனர். மக்களுக்குப் போராட உரிமை உண்டு; ஆனால், நமது சொந்த நகரங்களுக்குத் தீ வைப்பதற்கு அல்ல"
என்று தடாலாடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேபோல், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையான பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராகப் பிரம்மாண்ட பேரணிகளும், மோதல்களும் வெடித்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
 
 
ஐரோப்பாவில் நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலை குறித்து அமெரிக்கா தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
 
இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறுகையில், "பிரான்ஸ் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோசமான சூழ்நிலைக்கு அந்நாட்டின் தாராளவாதக் கொள்கைகளே (Liberal Policies) முக்கியக் காரணம். இதுகுறித்து அமெரிக்கா ஏற்கனவே பிரான்ஸை எச்சரித்திருந்தது. ஆனால், அவர்கள் அதை அலட்சியப்படுத்தியதன் விளைவை இப்போது அனுபவிக்கிறார்கள். எனினும், பிரான்ஸ் மக்கள் விரைவில் இந்த வன்முறைச் செயல்களை நிறுத்தி அமைதிக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
 
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஒரே நேரத்தில் வெடித்துள்ள இந்தப் பொருளாதாரப் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தையும் (EU) பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.