மொம்பாசா, கென்யா:

கென்யாவில் "இயேசுவை நேரில் சந்திக்கலாம்" எனக் கூறி, சிறுவர்கள் உட்பட 191 பேரைப் பட்டினி போட்டுக் கொலை செய்த வழக்கில், 'டூம்ஸ்டே' (Doomsday) வழிபாட்டுப் பிரிவின் தலைவர் போல் மெக்கன்சி (Paul Mackenzie) மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேர் குற்றவாளிகள் என்று மொம்பாசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2003 ஆம் ஆண்டு 'குட் நியூஸ் இன்டர்நேஷனல் மினிஸ்ட்ரீஸ்' (Good News International Ministries) என்ற அமைப்பைத் தொடங்கிய போல் மெக்கன்சி, தனது தீவிரப் போதனைகளால் ஆயிரக்கணக்கானோரை ஈர்த்தார்.

நவீனக் கல்வி, நவீன மருத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகள் ஆகியவை "சாத்தானின் அடையாளங்கள்" என்று அவர் போதித்து வந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது ஆதரவாதாளர்களைக் கென்யக் கடலோரப் பகுதியான ஷாகாஹோலா (Shakahola) காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு வெளி உலகத் தொடர்பற்ற ஒரு தனிச் சமூகத்தை உருவாக்கினார்.


இயேசுவை நேரில் காண்பதற்காகத் தங்கள் குழந்தைகளைப் பட்டினி போட்டு இறக்க வைக்குமாறு மெக்கன்சி கட்டளையிட்டார்.

இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டு, பலவந்தமாகக் கொலை செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

காட்டிற்குள் நிகழ்ந்த இந்த மரணங்களை மெக்கன்சியின் ஆதரவாளர்கள் 'திருமணங்கள்' எனக் கொண்டாடியுள்ளனர்.

இறந்தவர்கள் இயேசுவை மணந்துகொண்டதாக அவர்கள் நம்பியுள்ளனர். ஒரு கர்ப்பிணிப் பெண் தான் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தைக்குப் பாலூட்டக் கூடாது எனத் தடுக்கப்பட்டு, அந்தக் குழந்தை 12 நாட்களில் உயிரிழந்த கொடூரமும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.


கடந்த 2023 ஆம் ஆண்டு காடுகளுக்குள் தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் மூலம் இந்த விபரீதம் முதன்முதலில் உலகிற்குத் தெரியவந்தது.

அங்கு 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது முதற்கட்டமாக 191 பேரைக் கொலை செய்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒரு முதியவரைத் தவிர ஏனைய 190 பேரும் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் எட்டு மணி நேரம் தீர்ப்பை வாசித்த நீதியரசர் டயானா மொச்சாச்சே (Diana Kavedza-Mochache), மெக்கன்சி மற்றும் அவரது கூட்டாளிகள் 28 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்தார். இவர்களுக்கான அதிகாரப்பூர்வ தண்டனை விபரங்கள் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில், மெக்கன்சி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புதல் போன்ற மேலும் பல வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.