ஆஸ்திரேலியாவில் சக ஊழியர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட உணவில் நத்தை விஷத்தைக் கலந்து, சக ஊழியரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க முயன்ற குற்றச்சாட்டில் 43 வயது பெண் ஒருவர் மீது ஆஸ்திரேலிய காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் உள்ள ஓல்ட்பரி (Oldbury) பகுதியில் இயங்கி வரும் ஒரு தாவரப் பண்ணையில் (Plant Nursery) இச்சம்பவம் நடந்துள்ளது.
அங்கு பணிபுரியும் 58 வயதான பெண் ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் தனது சக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகக் காரசாரமான கறி (Curry) உணவு ஒன்றைத் தயாரித்து எடுத்து வந்துள்ளார்.
காலை தேநீர் இடைவேளையின் போது ஊழியர்கள் அனைவரும் அதனை எவ்விதப் பிரச்சினையுமின்றிப் பகிர்ந்து சாப்பிட்டுள்ளனர்.
மதிய உணவு நேரத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண் மீதமிருந்த உணவைச் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது உணவில் பிரகாசமான பச்சை நிறத் துகள்கள் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
சந்தேகமடையாமல் அதில் ஒரு பகுதியைச் சுவைத்த போது, அவரது நாக்கு உடனடியாக உணர்விழந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பல மாதங்களாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தியது. ஆய்வகச் சோதனையில், அந்த உணவில் நத்தைகளைக் கொல்லப் பயன்படும் 'மெடால்டிஹைட்' (Metaldehyde) என்ற கடுமையான நச்சுத்தன்மை கொண்ட இரசாயனப் பொருட்கள் கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
காவல்துறையின் விசாரணையில், காலை இடைவேளைக்குப் பிறகு, அங்கிருந்த இரசாயன சேமிப்புக் கிடங்கிலிருந்து நத்தை விஷத்தை எடுத்து வந்து, ஊழியர் அறையில் இருந்த கறியில் குற்றம் சாட்டப்பட்ட பெண் கலந்துள்ளார் என்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 43 வயது பெண்ணுக்கும், பாதிக்கப்பட்ட 58 வயது பெண்ணுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் நெருங்கிய உறவு (Personal Relationship) இருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மற்றொருவரின் உயிர், உடல்நலம் அல்லது பாதுகாப்பை ஆபத்துக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் கீழ் 43 வயது பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஆர்மடேல் நீதிமன்றத்தில் (Armadale Magistrates Court) நடைபெறவுள்ளது.
Comments 0
Be the first to comment.