துருக்கி நாட்டில் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகனின் ஆளும் கட்சிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரபல ‘ஹல்க் டிவி’ (Halk TV) ஊடக தலைமையகத்தை அந்நாட்டு நிதி குற்றப்பிரிவு பொலிஸார் அதிரடியாகச் சோதனையிட்டு, அதன் நேரடி ஒளிபரப்புகளை முற்றிலுமாக முடக்கியுள்ளனர்.
 
புதன்கிழமை காலை இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள இந்த ஊடகக் காரியாலயத்திற்குள் ஊழியர்கள் யாரும் நுழைய முடியாதவாறு பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
 
அத்துடன், இந்த ஊடகத்தின் உரிமையாளருடன் தொடர்புடைய 17 பேருக்கு எதிராக கைது கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சியின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதற்காக அரசாங்கத்தினால் புதிய அரச அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் மக்கள் கட்சியுடன் (CHP) நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் இந்த ‘ஹல்க் டிவி’, நாட்டில் எஞ்சியிருந்த ஒரு சில சுதந்திரமான ஊடகங்களில் ஒன்றாகும்.
 
அதிபர் எர்டோகனின் ஆளும் ஏ.கே. கட்சியின் (AK Party) மக்கள் விரோதப் போக்குகளை இந்த ஊடகம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தது.
 
இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து, எதிர்க்கட்சிகளையும் தமக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சுயாதீன ஊடகங்களையும் ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
முன்னதாக, அந்நாட்டு நீதிமன்ற உத்தரவின் மூலம் பிரதான எதிர்க்கட்சியான CHP கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் நீக்கப்பட்டிருந்தனர்.
 
 அத்துடன், அதிபர் எர்டோகனுக்கு சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இஸ்தான்புல் நகரின் பிரபல மேயர் எக்ரெம் இமாமோக்லு (Ekrem İmamoğlu) ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.