மொஸ்கோ:
ரஷ்யாவின் சைபீரிய பகுதியில் அமைந்துள்ள பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் ஒருவர், பிளேக் (Plague) நோய்த்தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ரஷ்ய அதிகாரிகளிடம் அவசரத் தகவல் கோரியுள்ளது.
மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 2,600 மைல் தொலைவில் உள்ள இர்குட்ஸ்க் (Irkutsk) நகர பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில், 28 வயதான டாரியா ஷிபிலோவா (Daria Shipilova) என்ற பெண் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
அண்மையில் ஆய்வகத்தில் மாதிரிகளைச் சேகரிக்கும் போது, உயிருள்ள பிளேக் பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக்குழாய் ஒன்று தற்செயலாக உடைந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்றும் ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மரணத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஷெலெகோவ் பகுதியில் உள்ள சில மருத்துவமனை வார்டுகள் முழுமையாகப் பூட்டப்பட்டுள்ளன 

இருப்பினும், ரஷ்யாவின் பொதுச் சுகாதார முகவர் நிலையமான Rospotrebnadzor இந்த மரணம் பிளேக் நோயினால் ஏற்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
 காரணம் கண்டறியப்படாத தீவிர நிமோனியா (Pneumonia) காய்ச்சலால் தான் அவர் உயிரிழந்தார் என ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது.
ஆனால், இந்த விளக்கம் ரஷ்யாவின் டெலிகிராம் (Telegram) அலைவரிசைகளில் வெளியாகும் செய்திகளுடன் முரண்படுவதால் சர்வதேச அளவில் சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணுக்குப் பரவியது மனிதருக்கு மனிதர் மிக வேகமாகப் பரவக்கூடிய கொடிய 'நிமோனிக் பிளேக்' (Pneumonic Plague) வகையாக இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
 இதன் காரணமாக, ஐரோப்பிய ஆணைக்குழு (European Commission) நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் (ECDC)  மற்றும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை Independent ஆகியவை இந்த விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவராத நிலையில், தற்போதைக்கு பொதுமக்களுக்கான பொதுச் சுகாதார ஆபத்து மிகக் குறைவாகவே காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது.