இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்திற்கு (PSTA) எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 
அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த "அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை" (PSTA) முழுமையாக இரத்துச் செய்யக் கோரி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமும் (PTA) வேண்டாம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் (PSTA) வேண்டாம் என வலியுறுத்தி வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு மக்கள் போராடினர்.
 
இதே கோரிக்கையை முன்வைத்து இதேநாளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாகவும் மற்றுமொரு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
 
சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இப்போராட்டத்தின் இறுதியில், புதிய சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டாம் என வலியுறுத்தும் கோரிக்கை மனு ஒன்றும் வாசித்துக் காட்டப்பட்டது.
 
இலங்கையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய 'அரசைப் பாதுகாக்கும் சட்டம்' (PSTA) மற்றும் நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஆகியவற்றின் காரணமாக, தமிழ் மக்கள் அரசியல், சமூக மற்றும் வாழ்வாதார ரீதியாக மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என மனித உரிமை அமைப்புகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் எச்சரிக்கின்றன.