கொழும்பு:

இலங்கையில் தென்னைச் செய்கைக்கு ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதித் திட்டமொன்றை அல்லது பொருத்தமான நட்டஈடு வழங்கும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பாகக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுவின் மூன்றாவது கூட்டம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களாக தென்னம்பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்குத் தற்போது முறையான பயிர் நட்டஈட்டுத் திட்டமொன்று அமுலில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், எதிர்காலத்தில் காப்புறுதித் திட்டமொன்றை அல்லது பொருத்தமான நட்டஈட்டு நடைமுறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.

தற்போது தென்னைச் செய்கையைப் பாதித்துள்ள வெள்ளை ஈ அச்சுறுத்தல் உள்ளிட்ட நோய்ப் பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தீவிரமான தலையீடு அவசியம் என அமைச்சர் வலியுறுத்தினார்.

அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள "250 செவ்விளநீர் கிராமங்கள்" வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, சாத்தியமான அனைத்துப் பிரதேசங்களுக்கும் கொண்டு செல்லுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.