முல்லைத்தீவு:
முல்லைத்தீவு, மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் (OPD) கடமையாற்றும் வைத்தியர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக, நோயாளி ஒருவர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
 
இச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அவசர கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
 
நேற்று (08.10.2026) திகதியிடப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், தனது தம்பிக்கு நேர்ந்த கொடூர அனுபவத்தையும், அங்கு நிலவும் மோசமான நிர்வாகச் சீர்கேடுகளையும் அவர் அடுக்கடுக்காகப் பட்டியலிட்டுள்ளார்.
 
கடந்த அக்டோபர் 08 ஆம் திகதி மதியம் 1:40 மணியளவில், முள்ளியவளையில் வசிக்கும் பிரதேச சபை உறுப்பினரின் தம்பியான ஞானதாஸ் யூடீசன் என்பவர் தச்சுப் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் கை வெட்டுப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார். சதைகள் கிழிந்து, இரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் அவர் அவசரமாக மாஞ்சோலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு (OPD) அழைத்துச் செல்லப்பட்டார்.
 
காயமடைந்த நோயாளி உயிருக்குப் போராடும் நிலையில் மதியம் 1:40 மணிக்கு அனுமதிக்கப்பட்டபோது, அங்கு கடமையிலிருந்த சந்திரமோகன் என்ற வைத்தியரிடம் முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
 
ஆனால், அவரோ எந்தவித மனிதாபிமானமுமின்றி, "மதியம் 2:00 மணிக்கு பின்னர்தான் பார்க்க முடியும்" எனக் கூறி சிகிச்சையளிக்க அடியோடு மறுத்துள்ளார்.
 
கையிலிருந்து இரத்தம் தொடர்ந்து கொட்டிக் கொண்டிருந்த நிலையிலும், மதியம் 1:40 முதல் 1:55 மணி வரை அந்த வைத்தியர் நோயாளிக்குச் சிகிச்சை அளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
 
 பின்னர் மதியம் 2:05 மணியளவிலேயே, பிரியா என்ற மற்றொரு வைத்தியரைத் தொலைபேசியில் அழைத்து விபரம் கூறி, அவரது அனுமதியைப் பெற்ற பின்னரே நோயாளி உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்துப் பிரதேச சபை உறுப்பினர் நேரடியாகச் சென்று அங்கிருந்த சந்திரமதி என்ற ஊழியரிடம் வினவியபோது, அவர் பொது ஊழியர் என்ற எல்லையை மீறி, "முன்னர் இருந்த வைத்தியரின் பெயர் என்னவென்று கேட்க உங்களுக்கு உரிமை இல்லை. நீ போய் அங்கு கேள்" என மிகவும் கடினமான தொனியில் பேசி, முரண்பட்டுள்ளார்.
 
கடிதத்தின் இறுதியில் பணிப்பாளரை நோக்கி கடுமையான கேள்விகளைப் பிரதேச சபை உறுப்பினர் முன்வைத்துள்ளார்:
  • வைத்தியசாலையில் இவ்வாறான செயல்கள் நடப்பது நிர்வாகச் சீரின்மை காரணமா? அல்லது உங்களுடைய தலைமைத்துவப் பிரச்சனையா?
  • உங்களுக்குக் கீழ் பணிபுரியும் வைத்திய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லையா?
  • பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தப் பிரச்சிணைகளுக்கு நீங்கள் என்ன பதில் கூறப்போகிறீர்கள்?
இனிவரும் காலங்களில் இவ்வாறான மரண ஓலங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்தக் கடிதத்தின் பிரதிகள் அவசர நடவடிக்கைக்காக வட மாகாண ஆளுநர், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர், நோயாளி நலன்புரிச் சங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், செல்வம் அடைக்கலநாதன், திலகநாதன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.