ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025–2027 தொடரின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட பலமிக்க இலங்கை குழாம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்முறை இலங்கை டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியதை அடுத்து, புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்டர் குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே வெள்ளைப் பந்து (ODI & T20I) வடிவங்களுக்கு கேப்டனாக இருக்கும் நிலையில், தற்போது மூன்று வடிவங்களுக்கும் தலைவராகப் பொறுப்பேற்று அணியை வழிநடத்தவுள்ளார். 

இந்தத் தொடரில் உள்நாட்டுப் போட்டிகளில் அசத்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் அஞ்சல பண்டார மற்றும் வேகப்பந்து வீச்சாளர் எஷான் மாலிங்க ஆகியோர் தங்களது அறிமுக டெஸ்ட் அழைப்பைப் பெற்றுள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்டு வரும் நட்சத்திர வீரர் பெதும் நிஸ்ஸங்கவின் பங்கேற்பு அவரது முழு உடற்தகுதியை பொறுத்தே அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரோஷன் டிக்வெல்ல போன்ற சீனியர் வீரர்கள் இத்தொடரில் நீக்கப்பட்டுள்ளனர். 

 

1ஆவது டெஸ்ட் நவம்பர் 09 - 13 ராவல்பிண்டியிலும் 2ஆவது டெஸ்ட் நவம்பர் 17 - 21 | லாகூரிலும் இடம்பெறவுள்ளன.

அணியில் குசல் மெண்டிஸ் (தலைவர்), தனஞ்சய டி சில்வா, பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபண்டார, சொனால் தினுஷ, அஞ்சல பண்டார, கேஷார நுவந்து, பிரபாத் ஜயசூரிய, மிலான் ரத்நாயக்க, லஹிரு குமார, அசித பெர்னாண்டோ, தில்ஷான்மதுஷங்க, எஷான் மாலிங்க போன்றோர் உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளின் பட்டியலில் இலங்கை அணி 7வது இடத்திலும், பாகிஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளதால் இரு அணிகளுக்கும் இத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.