கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர் கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டவிரோத மது பாவனையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

செல்வாநகர் கிராம பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை செல்வாநகர் முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் திரண்ட பொதுமக்கள், அங்கிருந்து போதைப்பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாகப் புறப்பட்டனர். இப்போராட்டப் பேரணி செல்வாநகர் சந்தி வரை சென்று நிறைவடைந்தது.

கிராமத்தில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மது விற்பனை தடையின்றி அதிகரித்துள்ளதால், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகப் போராட்டக்காரர்கள் கவலை வெளியிட்டனர். இதனால் கிராமத்தில் சமூகச் சீரழிவுகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், கிராமத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்டவிரோத மது விற்பனையாளர்களுக்கு எதிராகப் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாகத் தீர்க்கமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது மக்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.