கொழும்பு:

 சவூதி அரேபியாவில் முகநூல் (Facebook) பதிவொன்றுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக, இலங்கையின் ஐந்து பேர் கொண்ட விசேட சட்டப் பிரதிநிதிகள் குழு சவூதி அரேபியா விரைந்துள்ளது.

மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான இறுதிக்காலம் அக்டோபர் 17 ஆம் தேதியுடன் நிறைவடைவதால், இந்த சட்ட நகர்வுகள் அதிதீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வழங்கிய தகவலின்படி, சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு உள்ளூர் சட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்த மேல்முறையீட்டு மனுவைத் தயாரிப்பதற்காகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தூதுக்குழுவில் முக்கியப் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி (தலைமை), ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, சட்டத்தரணி ஹஃபீல் பாரிஸ், ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் நாயகம் நீதிபதி எம்.டீ. மொஹமட், மற்றும் இணைப்புச் செயலாளர் மொஹமட் ரியாஸ்தீன் சில்மி குழுவில் உள்ளடங்குகின்றனர்.

தற்போது சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இக்குழுவினர், அங்குள்ள சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து, தற்போதைய வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பொது மன்னிப்புக் கோரிக்கையை எவ்வாறு சவூதி மன்னரிடம் சமர்ப்பிப்பது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். 

பின்னணி என்ன?
இலங்கையின் கல்முனை, நாற்பிட்டிமுனையைச் சேர்ந்த 24 வயதான சிவராசா அனோஜன், சவூதி அரேபியாவில் புலம்பெயர் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இலங்கையில் நடந்த பௌத்த/இந்து புனித யாத்திரையின் போது ஏற்பட்ட இணைய விவாதத்தின் போது, இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கடந்த ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். 
 
அனோஜன் உடனடியாக அப்பதிவை நீக்கி, மன்னிப்புக் கோரும் வீடியோவை வெளியிட்ட போதிலும், அதன் ஸ்கிரீன்ஷாட் (Screenshot) சவூதி அதிகாரிகளுக்குக் கிடைத்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில், சவூதியின் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் (சுமார் 800,000 டாலர்) அபராதமும் விதித்தது.
 
எனினும், சவூதி அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, வழக்கை கடுமையான 'ஷரியா' (Sharia) சட்டத்தின் கீழ் விசாரிக்கக் கோரினர். அதன்படி, கடந்த செப்டம்பர் 17 அன்று சவூதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
 
இவ்விவகாரம் குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்துத் தெரிவிக்கையில், அனோஜனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அவரை விடுவிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் மிக உயர்ந்த மட்டத்தில் தீவிர இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். 
 
முன்னதாக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அனோஜனின் பெற்றோரை நேரில் சந்தித்து, சவூதி மன்னரின் பொது மன்னிப்பைப் பெற்றுத்தர அரசாங்கம் அனைத்து சட்ட மற்றும் இராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தும் என உறுதியளித்திருந்தார்.
 
இதேவேளை, இலங்கையின் பௌத்த மகாநாயக்க தேரர்கள், இந்து சமயத் தலைவர்கள் மற்றும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் சவூதி அரசாங்கம் மனிதநேய அடிப்படையில் அனோஜனுக்குக் கருணை காட்ட வேண்டும் எனப் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதோடு, இராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.