கொழும்பு:
 நாட்டில் தற்சமயம் மனநல விசேட வைத்தியர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார்.
 
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையிலுள்ள மனநல வைத்தியர்களுக்கு சர்வதேச ரீதியில், குறிப்பாக அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகிய நாடுகளில் எந்நேரமும் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையில் வழங்கப்படும் மனநல மருத்துவப் பயிற்சி சர்வதேச தரம் வாய்ந்தது என்பதால், வைத்தியர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதே இந்த தற்போதைய பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது எனவும் அவர் கூறினார்இது குறித்து பேராசிரியர் சதுரி சுரவீர மேலும் கருத்து தெரிவிக்கையில்;
"தற்போது இலங்கையில் சுமார் 100 முதல் 120 வரையிலான விசேட மனநல வைத்தியர்கள் மட்டுமே உள்ளனர்.
 
 சிகிச்சை பெற வரும் நோயாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கிளினிக் மற்றும் தேசிய மனநல நிறுவனத்தின் கிளினிக் ஆகிய இரண்டிலும், ஒரு காலை நேர கிளினிக்கிற்கு மட்டுமே தலா 150 நோயாளர்கள் வரை வருகை தருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
 
அத்துடன், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தில் வாழும் எந்தவொரு நபருக்கும் மனநலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இதில் யாரும் விதிவிலக்கல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
மனநோய்களின் போது மனிதர்களின் எண்ணங்கள்தான் மாற்றமடைகின்றன. இதனால் தமக்கு நோய் ஏற்பட்டுள்ளதை நோயாளிகளால் சுயவிருப்பத்துடன் உணர முடியாமல் போகலாம். ஆனால், சுற்றியுள்ளவர்களால் அவர்களது நடத்தை மாற்றங்களை அவதானிக்க முடியும். எனவே, பாதிக்கப்பட்டவர்களைத் தகுதியான வைத்தியர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.
 
முறையான சிகிச்சக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் தங்களது இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள் என்பதால், சமூகத்தில் இது குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம் என பேராசிரியர் சதுரி சுரவீர மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.