யாழ்ப்பாணம்:

யாழ்ப்பாணத்தில் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடமிருந்து அதனை மீட்டு, திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான குறித்த காணியை நபர் ஒருவர் நீண்டகாலமாக அடாத்தாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இது தொடர்பாக திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையினை அடுத்து, வழக்கினை விசாரித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் காணியை உடனடியாக அரச வசம் ஒப்படைக்குமாறு தீர்ப்பளித்தது.

நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், பொலிஸ் பாதுகாப்புடன் குறித்த பகுதிக்குச் சென்ற அதிகாரிகள், சட்டவிரோத ஆக்கிரமிப்பில் இருந்த காணியை மீட்டு நீர்ப்பாசன திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
அரச காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.