யாழ்ப்பாணம்:
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை முழுமையாக விடுவிக்கக் கோரி, வலி. வடக்கு மக்கள் இன்று தங்களின் 20ஆவது வாரத் தொடர் நிலமீட்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை, பலாலி மற்றும் வசாவிளான் சந்தி உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் ஒன்றுதிரண்ட பொதுமக்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணியிலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த 36 வருடங்களுக்கும் மேலாகத் தங்களின் பூர்வீக வீடுகள், விவசாய நிலங்களை இழந்து, அகதி முகாம்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை உடனடியாக மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கடந்த வாரம் கொட்டித் தீர்த்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தங்களின் 19ஆவது வாரப் போராட்டத்தைத் தொடர்ந்த மக்கள், தற்போதும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற உறுதியுடன் வீதியில் இறங்கியுள்ளனர்.
பலாலி மற்றும் மயிலிட்டி உள்ளிட்ட வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் முடக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகள் மற்றும் பூர்வீக குடியிருப்புக்களை இராணுவம் உடனடியாக விடுவித்து தங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இராணுவக் கட்டுப்பாட்டில் தொடரும் தங்களின் நிலங்களை மீட்கும் வரை இந்தத் தொடர் போராட்டம் வாரந்தோறும் தொடரும் எனப் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Comments 0
Be the first to comment.