கொழும்பு:

இலங்கையில் வங்கியொன்றில் கணக்கொன்றைத் திறத்தல், வாகனப் பதிவு மற்றும் காணிப் பதிவு உள்ளிட்ட குறிப்பிட்ட சில முக்கிய செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) சமர்ப்பிப்பது நாளை (01) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது தங்களது TIN இலக்கத்தைக் கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

• வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் புதிய கணக்கொன்றைத் திறத்தல்.
• கடன் அட்டையைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்.
• புதிய மோட்டார் வாகனத்தைப் பதிவுசெய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல்.
• காணியொன்றை அல்லது காணியின் உரிமத்தைப் பதிவுசெய்தல்.
• புதிய வணிகத்தைப் பதிவுசெய்தல்.
• இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல்.
• கட்டிட வரைபடத்திற்கு (Building Plan) அனுமதி பெறுதல்.
குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் சமர்ப்பிக்கும் TIN இலக்கம் செல்லுபடியானதுதானா என்பதைப் பொறுப்பான அதிகாரிகள் ஆன்லைன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

TIN இலக்கத்தைப் பெறுவது மற்றும் உறுதிப்படுத்துவது எப்படி?
இதுவரை TIN இலக்கத்தைப் பெறாத நபர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இ-சேவை (e-Services) இணையத்தளம் ஊடாக அதற்குப் பதிவுசெய்து கொள்ள முடியும்.
அத்துடன், தன்னிடம் உள்ள TIN இலக்கம் செல்லுபடியானதா என்பதையும் இந்த இ-சேவை வாயிலாகவே உறுதிப்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளம் ஊடாக இந்த உறுதிப்படுத்தல் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர், நபரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் காட்டப்பட்டுள்ள அச்சிடப்பட்ட பிரதியை (Printout), குறிப்பிட்ட செயற்பாடுகளுக்காக உத்தியோகபூர்வ TIN சான்றிதழுக்குப் பதிலாக மாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டு திறைசேரி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.