தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் கடற்பகுதிகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது தீவிர தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 31) முற்பகல் நிலவரப்படி, இந்த தீவிர தாழமுக்கம் வட அகலாங்கு 10.0° N மற்றும் கிழக்கு நெட்டாங்கு 90.2° E இற்கு அருகில் மையம் கொண்டிருந்தது. இது மேலும் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, இன்று இரவுக்குள் தீவிரமடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நகரும் இத்தொகுதி, நாளை (2026 நவம்பர் 01) இரவு 11.30 மணியளவில் முழுமையான புயலாக (Cyclone) வலுவடையும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், நவம்பர் 02ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் ஆந்திரப் பிரதேச கரையோரப் பிரதேசங்களை ஒட்டிய மத்திய-மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியைச் சென்றடையும் என வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும். கடற்பகுதிகள் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படும்.
கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மறுஅறிவித்தல் வரும் வரை இந்த கடற்பகுதிகளுக்குச் செல்வதை முற்றாகத் தவிர்க்குமாறு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்காள விரிகுடாவில் தீவிர தாழமுக்கம்: நாளை புயலாக மாறுகிறது; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
Comments 0
Be the first to comment.