யாழ்ப்பாணம்:
அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வான ‘திருநாள் மங்கலம்’ இன்று (30.10.2026) மாலை யாழ்ப்பாணம் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ள இவ்விழாவின் தொடக்க நிகழ்விற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் அவர்கள் தனது தொடக்கவுரையினை வழங்கி நிகழ்வை முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.

இலக்கியப் பன்னெடுங்காலப் பாரம்பரியமிக்க யாழ்ப்பாண மண்ணில், கம்ப இராமாயணத்தின் தத்துவங்களையும் தமிழ் மொழியின் சுவையையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள இக்கம்பன் விழாவில், பலதரப்பட்ட தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து வரும் நாட்களிலும் பல்வேறு சுவையான இலக்கியச் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்களுடன் இவ்விழா விமரிசையாக நடைபெறவுள்ளது.