வவுனியா:
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் (FUTA) கூட்டுத் தீர்மானத்திற்கு அமைவாக, வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர்களினால் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிச் சுமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்:

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது திணிக்கப்பட்ட அதிகப்படியான வரிச் சுமையைக் குறைத்தல்.விசேட தெரிவு பெறுபவர்களுக்கான கொடுப்பனவுகளை முறையாக வழங்குதல். மாணவர்களின் பரீட்சை வினாத்தாள் திருத்துவதற்கான கொடுப்பனவுகள் மற்றும் மேலதிகப் பயணக் கொடுப்பனவுகளை அதிகரித்தல்.

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான முதலாம் ஆண்டு பாடசாலை அனுமதிப் பிரச்சினைகளுக்கு உரிய நிரந்தரத் தீர்வை வழங்குதல். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பிரதான ஆர்ப்பாட்டப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அதற்கு வலுசேர்க்கும் வகையிலுமே வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்த பிராந்திய அளவிலான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.