வவுனியா:
வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று (அக்டோபர் 28) போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட அதிரடி திடீர் போதைப்பொருள் பரிசோதனையில், போதைப்பொருள் பாவித்திருந்த 5 பேருந்து சாரதிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) இந்திக்க கப்புக்கொட அவர்களின் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்தச் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மருத்துவ நிறுவன அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர்.

பயணிகள் மற்றும் பொதுமக்களின் வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் மற்றும் மதுபானம் அருந்திவிட்டு பொறுப்பற்ற முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கைது செய்யப்பட்டுள்ள 5 சாரதிகளுக்கும் எதிராகத் தீவிர சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, வரும் நாட்களிலும் இத்தகைய அதிரடிச் சோதனைகள் தொடரும் என வன்னி மாவட்ட பொலிஸ் உயர்தர அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பயணிகளின் உயிரோடு விளையாடும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.